×

அகழாய்வு நடத்தப்படவுள்ள சிவகளையில் 2 இரும்பு குண்டு கண்டுபிடிப்பு

ஏரல்: சிவகளையில் அகழாய்வு நடத்தப்படவுள்ள இடத்தில்2 பழங்கால இரும்பு எடை குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம் சிவகளை பரும்பு பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சி நடத்தியதில் முதுமக்கள் தாழி, குடியேற்ற பகுதி, புடைப்பு சிற்பம், கல்தூண், வட்டகல், பாறைகிண்ணம், கற்கால மனிதர்களின் ஆயுதங்கள் என கண்டுபிடித்தார். இவை அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொல்லியல் கண்டுபிடிப்புகளை அவர், இந்திய, தமிழக தொல்லியல் துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் அவர்கள் சிவகளை பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அகழாய்வு நடத்தவுள்ள சிவகளை பரும்பு பகுதியில் 2 குழிகளும், வெள்ளத்திரடு பகுதியில் ஒரு குழியும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளை ஜிபிஆர் மற்றும் டோபோகிராபி சாதனங்களை கொண்டு தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். சிவகளை, ஆதிச்சநல்லூரில் அடுத்த வாரம் முதல் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் தெரிவித்தார். இந்நிலையில் ஆசிரியர் மாணிக்கம் அப்பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 2 இரும்பு எடைக் குண்டுகளை நேற்று கண்டுபிடித்துள்ளார். அவர் கூறியதாவது, சிவகளை பரும்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த இரும்பு குண்டுகளும் எண்முக வடிவத்திலுள்ளது. ஒன்று 5 கிலோ 700 கிராமும் மற்றொன்று 2 கிலோ 800 கிராம் எடையும் உள்ளது.

பழங்காலத்தில் எடைக்கற்களாகவோ அல்லது இரும்பு உருண்டைகளாகவோ பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இது இரும்பு காலத்தை சேர்ந்ததாகவோ அல்லது வரலாற்று காலத்தைச் சேர்ந்த எடைக்கற்களாகவோ இருக்கலாம். பல ஆண்டுகள் மண்ணில் புதைந்திருந்ததால் துருப்பிடித்து இதனுடைய எடை குறைந்து காணப்படலாம். மேலும் இதன் அமைப்பை பார்க்கும் போது வரலாற்று கால போர்களில் பயன்படுத்தப்பட்ட இரும்பு குண்டுகளாக இருக்கலாம் என்றார். இதுபோன்று இன்னும் பல சிவகளை முதல் ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை வரை பூமிக்கடியில் புதைந்திருக்கலாம். முறையாக அகழாய்வு செய்யும் போது மேலும் பல அரியவகை பொருட்கள் கிடைக்கும். அப்போது சிவகளை பற்றிய வரலாறு உலகுக்கு தெரியவரும் என தெரிவித்தார்.

Tags : Sivagala , 2 Iron Bomb,Discovery , Sivagala, Excavated
× RELATED கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளையை...